கொடுமணல்

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, கொடுமணல் (பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்) பகுதியில் அகழாய்வு நடத்தியது.

 

இவ்வகழாய்வு, பெருங்கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலத்திய பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், கருப்பு வண்ணப் பூச்சு கொண்ட பானை ஓடுகள், சிவப்பு வண்ணப் பூச்சு கொண்ட பானை ஓடுகள் மற்றும் சிவப்பு வண்ணம் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், குவார்ட்ஸ் மற்றும் களிமண்ணால் ஆன மணிகள், எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் குறியீடு கொண்ட பானை ஓடுகளும் சேகரிக்கப்பட்டன.

 

இப்பகுதியில் காணப்பட்ட பெருங்கற்காலக் கல்வட்டப் பகுதியிலும் அகழாய்வு செய்யப்பட்து. நான்கு கால்கள் கொண்ட ஜாடி, கிண்ணங்கள், வட்டில்கள், மூடிகள் மற்றும் தாழிகள் முதன்மைக் கல் திட்டைக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டன.


இத்திட்டையின் தென்கிழக்குப் பகுதியில் காணப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்து 782 கார்னிலியன் மணிகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதல் கல்திட்டையின் கிழக்கு பகுதியில் 169 செ.மீ நீளம் கொண்ட இரும்பு வாள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், நான்கு இரும்பு வாள்கள், செம்பு வடிகட்டி, சிறிய பிச்சுவாள் மற்றும் குறியீடு கொண்ட பானை ஓடுகளும் இவ்வகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.