கோவை அகழ்வைப்பகம் - கோயம்புத்தூர்
Get Direction / Information
வேலை நேரம் |
: 10.00 a.m to 5.00 p.m |
விடுமுறை |
: வெள்ளிக் கிழமை |
அதிகாரி |
Thiru S.Nandakumar, Curator-I/C |
தொலைபேசி |
: ------------ |
தற்போதைய ஆடை தயாரிப்பிற்குப் பெயர் பெற்ற நகராகத் திகழும் கோவையைச் சுற்றிப் பல தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை வெள்ளலூர். போளுவாம்பட்டி, பேரூர் மற்றும் வேட்டைக்காரன் மலை ஆகியவையாகும். வேட்டைக்காரன் மலையில் உள்ள குகை ஓவியங்களில் விலங்குகளும். வேட்டைக்காட்சிகளும், நடனக் காட்சிகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
வெள்ளலூரில், கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த ரோமானிய காசுகள், தங்கம், வெள்ளி ஆகியவை புதையலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்களில் குறிப்பிடத்தக்கவை தங்கத்தினால் ஆன ரோமானிய உருவங்கள் பொறிக்கப்பட்ட ஆபரணங்களாகும்.
இத்துறை 1980-ஆம் ஆண்டு போளுவாம்பட்டியில் அகழாய்வு மேற்கொண்டது. இவ்வகழாய்வில் சுடுமண் உருவங்கள், சுடுமண் முத்திரை, பெரிய அளவிலான செங்கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இச்சுடுமண் உருவங்களில் இயக்கன், இயக்கி, மைத்ரேயர், புத்தரின் தலைப்பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பண்டைய தமிழ் எழுத்துடன் கூடிய முத்திரையில் வர்மன் என்ற பெயர் காணப்படுகின்றது. தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளில், யத், யான் கொற்றி, மற்றொரு வட்டெழுத்துப் பொறிக்கப்பட்ட பானை “ங்கு சபை குழி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு முத்திரைக் காசுகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பேரூரின், தெற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள சுண்டைக்காமுத்தூர் அருகில் கரடிப்பாறை என்ற கல்லில் வட்டெழுத்தும், தமிழ் எழுத்தும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு சோழ மன்னன் முதலாம் ஆதித்தனின் (கி.பி. 871-909) பெயரால் இராஜகேசரி பெருவழி என்ற ஒரு பெருவழி இருந்ததைக் குறிக்கிறது.
இந்தப் பண்டைய பெருவழி பண்டைய சேர நாடான கேரளத்தை இணைக்கும் முகமாக பாலக்காட்டு கணவாய் வழியாகப் பேரூர், வெள்ளலூர், சூலூர், கத்தன்காணி, கொடுமணல் (பண்டைய கொடுமணம்) வழியாக அமராவதியில் உள்ள சேரர் நகரான கரூர் வரை செல்கின்றது. எனவே, இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவத்தையும் வணிகத் தொடர்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இத்துறை 1981-ஆம் ஆண்டு அகழ்வைப்பகத்தைத் தொடங்கியது.
காட்சிப் பொருட்கள்:
சிற்பங்கள், தாழிகள், அவற்றில் காணப்படும் பானைகள், கொங்கு மன்னர்களின் கல்வெட்டுகள், வீரக்கற்கள் மற்றும் மேற்பரப்பு ஆய்வுகளிலும் அகழாய்வுகளிலும் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் ஆகியவையாகும்.