ஸ்ரீரங்கம்

திருச்சியிலிருந்து 12 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றங்கரையில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வளாகத்தில் 2013-14, 2014-15 ஆகிய இரு ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது..

இக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. சோழர், பாண்டியர், விஜயநகர மற்றும் நாயக்கர் காலம் என பல்வேறு கால கட்டங்களில் இக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் அதிட்டானத்தில் அமைந்திருந்த புடைப்புச் சிற்பங்களை வெளிக்கொணரும் நோக்கில் 2013-14ஆம் ஆண்டில் பண்பாட்டு அகழாய்வு நடைபெற்றது.

இவ்வகழாய்வில் யானைச்சிற்பத்தின் பின்புறம் மனித உருவம் ஒன்று அங்குசம் போன்ற ஆயுதத்தினை கையில் பிடித்தவாறு நின்ற நிலையில் உள்ள சிற்பத்தொகுதி வெளிப்படுத்தப்பட்டது. யானையை அடக்கும் நிலையில் இக்காட்சி அமைந்துள்ளது. மேலும் அதிட்டானத்தின் கண்டப்பகுதியில் அரசியர் உட்பட பல்வேறு சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.


2014-15 ஆம் ஆண்டில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையப்பகுதியில் உள்ள நம்பெருமாள் மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் அகழாய்வு நடைபெற்றது. இம்மண்டபத்தின் அதிட்டானப்பகுதி சக்கரத்துடன் குதிரை இழுத்துச் செல்வது போல் உள்ளது. இதில் கீழ்ப்பகுதிகள் சிமெண்ட் தரையைக் கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்ததால் அப்பகுதியினை நீக்கி அதிட்டானத்தை முழுவதுமாக வெளிக்கொணரும் நோக்கில் பண்பாட்டு அகழாய்வு நடைபெற்றது. சிமெண்ட் பகுதிகளை முழுவதுமாக நீக்கிய நிலையில் சக்கரத்தின் முழுப்பகுதியும், குதிரைச் சிற்பத்தின் அழகிய முழு உருவமும் வெளிக்கொணரப்பட்டன.