செப்புத் திருமேனிகளில் உள்ள கல்வெட்டுகள்
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் மிக அற்புதமான செப்புத் திருமேனிகள் தெய்வங்களின் மீது கொண்ட பக்திப் பெருக்கால் பல்லாயிரக்கணக்கில் வடிக்கப்பட்டு இன்று உலகளாவிய பெருமைமிக்க கலைப் பொருள்களாக விளங்குவதை நாம் அறிவோம். இத்தெய்வத் திருமேனிகளைக் கொடையளித்த கொடையாளர்கள் மிகப் பக்திப் பணிவுடன் அளித்தமையால் அவை எல்லாம் யார் யாரால் கொடுக்கப்பட்டவை என்பதை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. எனினும் மிக சில செப்புத் திருமேனிகளின் பீடங்களில் அவற்றின் பெயர், கொடடையளித்தவர், கொடை பற்றிய செய்திகள், உருவாக்கிய கலைஞரின் பெயர், காலம் முதலியவை காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, நாகப்பட்டினம் மாவட்டம் கரைவீரம் என்ற ஊரில் நின்ற நிலையில் வடிக்கப்பட்ட சிவபிரானின் தேவியாகிய உமா படாரகியின் செப்புத் திருமேனியின் பீடத்தில் உள்ள கல்வெட்டினைக் குறிப்பிடலாம். ‘மதுரை கொண்ட பரகேசரி’ என்ற சிறப்புப் பெயருடைய பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 907-955) பிரம்ம ஸ்ரீ கொங்கர் என்பவருக்காக இந்த உமா படாரகி திருமேனி வடிக்கப்பட்டமையை அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சில கல்வெட்டுகள் நீண்ட கல்வெட்டுகளாகவும், செப்புத் திருமேனிகளில் அமைந்துள்ளன. கடலூர் மாவட்டம் தீரத்தநகரியில் (திருத்திணை நகர்) உள்ள செப்புத் திருமேனி ‘ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீகோப்பெருஞ்சிங்க தேவர்’ என்று காடவ மன்னன் பெயரைக் கொண்டுள்ளது. சில செப்புத் திருமேனிகள் ஆட்களின் உருவங்களாகவும், அவர்களது பெயர்களைக் கல்வெட்டாயக் கொண்டும் காணப்படுகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் கிடைத்த நாயக்கர் கால உருவ செப்புத் திருமேனியில் ‘சிறுமல்லப்பன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளதையும் மாராட்டியர் காலத் திருமேனியில் ‘அம்மணி அம்மாள்’ என்ற பெயர் உள்ளதையும் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.