பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சி, நாயக்க மன்னன், வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைநகரமாக கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திகழ்ந்திருந்தது. இவ்வூர், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ளது.

 

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதி சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்டுப் பகுதியாகத் தென்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த மாளிகைப் பகுதியின் எச்சத்தை வெளிப்படுத்தும் நோக்கில் அகழாய்வு நடத்தப்பட்டது.

 

அகழாய்வில் மாளிகையின் பிரதானப் பகுதி வெளிக் கொணரப்பட்டது. நுழைவாயில், கிழக்கு நோக்கி இருப்பதும், மாளிகையின் இருபுறங்களிலும் மூன்று அறைகள் இருப்பதும் 1-1/2 மீட்டர் அளவிலான ஒரு சதுரக்குழி சுண்ணாம்புப் பூசப்பட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. இக்குழி தானியம் சேகரிக்கும் இடமாக இருக்கலாம்.

 

மக்கள் கூடும் சபை இருந்த இடம் இந்தக் கண்டுபிடிப்பின் முக்கிய அம்சமாகும். உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்ட மேடையுடன் இச்சபை காட்சியளிக்கிறது. கிழக்கு மேடை, விளக்குகள் வைக்கும் குழிப் பகுதிகள் மற்றும் அலங்கார வார்ப்புகளுடன் காணப்படுகிறது. மேலும், அகழாய்வில் மக்கள் கூடும் இடத்தினை ஒட்டி கல்யாண மண்டபப் பகுதி நிடுவே சதுர மேடையும் சுற்றிலும் வழியும் கொண்டுள்ளது வெளிப்படுத்தப்பட்டது.