வசவசமுத்திரம்

மாமல்லபுரத்திலிருந்து தெற்கே 11 மைல் தொலையிலும், வயலூருக்கு வடக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வசவசமுத்திரம் முக்கியமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடமாகும். கள ஆய்வின் போது கூம்பு வடிவ ஜாடி மற்றும் ரோமானிய ஆம்போராவின் கழுத்து பகுதி ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

 

இப்பகுதியில் 1-2 ஆம் நூற்றாண்டில் (கி.பி 100-200) ரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பு இருந்ததை இவற்றின் மூலம் அறிய முடிகின்றது. அகழாய்வில் அடுத்தடுத்து அமைந்த இரண்டு வட்டக் கிணறுகள் வெளிப்படுத்தப்பட்டது.

 

இவை செங்கற்சுவரில் கட்டப்பட்டுள்ள தொட்டியைச் சார்ந்து அமைந்துள்ளது. இத்தொட்டிகள் சாயம் போடுவதற்கோ அல்லது துவைப்பதற்கோ பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

ரௌலட்டடு ஓடுகள், ஆம்போரே ஓடுகள், சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், சிவப்புப் பூச்சுப் பானை ஓடுகள், கருப்பு பூச்சு பானை ஓடுகள் மற்றும் பழுப்பு வண்ணப் பானை ஓடுகள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய தொல்பொருட்களாகும்.