ஐரோப்பிய மொழி கல்வெட்டுகள்
ஐரோப்பிய மொழிகளான போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், ஆர்மெனியம் மற்றும் ஆங்கிலக் கல்வெட்டுகள் தமிழகத்தில் கிடைக்கின்றன. பெரும்பாலும் கல்லறைகள், தேவாலயங்கள், கோட்டைகள், சிலைகள் ஆகியவற்றில் இக்கல்வெட்டுகள் ஐரோப்பியர்களின் கிழக்கிந்திய கம்பெனிகள் காலச் செய்திகளைச் சொல்வனவாகும். போர்ச்சுகீசிய மொழிக் கல்வெட்டு மைலாப்பூர் லஸ் தேவலாயத்தில் காணப்படுகிறது.
பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேவாலயத்தை ஒட்டிய இடுகாட்டுக் கல்லறைகளில் போர்ச்சுகீசிய மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள புனிதமேரி தேவாலயத்திலும், சாந்தோம் தேவாலயத்திலும் காணப்படும் பல கல்லறைகளைச் சேர்ந்த கற்களில் ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. பழவேற்காடு சதுரங்கப்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கல்லறைகளில் டச்சு மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தரங்கம்பாடியில் உள்ள கல்லறைகளில் டேனிஷ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சென்னையை அடுத்துள்ள சின்னமலையில் கி.பி. 1663 யைச் சேர்ந்த ஆர்மேனிய மொழிக் கல்வெட்டுள்ளது.
தென்னிந்தியாவில் கிடைக்கும் பழமையான கிரேக்க மொழிக் கல்வெட்டு சென்னையை அடுத்துள்ள பெரம்பூரில் அறியப்பட்டு தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1727 ஆம் ஆண்டு மே திங்கள் 16 ஆம் நாளில் டிரான்சில்வானிவைச் சேர்ந்த ஜோன்ஸ் கான்ஸ்டாடினஸ் (துடியnநேள ஊடிளேவயவேiரேள டிக கூசயளே ஏயnயை) என்பவர் காலமானதைக் குறிப்பிடுகிறது.
1803, 1811, 1812-13 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த ஆங்கிலம் மற்றும் தமிழ் வாசகங்களை உடைய மேலும் மூன்று கல்லறைக் கல்வெட்டுகளும் இங்குள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களாகும்.
எட்வேர்டு பல்கி என்ற கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய மருத்துவரின் கல்லறை சென்னை மருத்துவக் கல்லூரியின் எதிரில் கோட்டை தொடர்வண்டி நிலையம் அருகில் உள்ளது. இது கி.பி. 1714-ல் இலத்தீன் மொழியில் பொறிக்கப்பட்ட வாசகத்தை உடையதாகும்.
சென்னை சைதாபேட்டையில் அடையாறு மீதான பாலம் (மர்மலாங் பாலம்) கி.பி. 1726-ல் பெட்ரஸ் உஸ்கான் (ஞநவசரள ருளஉயn) என்ற ஆர்மேனிய வணிகரால் கட்டப்பட்டது. இதனைக் குறிக்கும் கல்வெட்டு அங்குள்ளது. இதனை அடுத்து கால்நடை மருத்துவமனையை ஒட்டி ஓடி அடையாற்றில் கலக்கும் சிறு ஓடை மீது கி.பி. 1786-ல் கட்டப்பட்ட பாலத்தை பற்றிக் குறிப்பிடும் ஒரு நினைவுத் தூண் ஒத்தை தேடை தற்பொழுது பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ளது. இதனில் ஆங்கிலம், இலத்தீன், பாரசீகம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் நான்கு பலகைக் கற்களில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு நான்கு புறமும் பதிக்கப்பட்டுள்ளன.
கிறித்துவ மதபோதகக் குழுக்களின் தாக்கம் காரணமாக தமிழோடு போர்க்சுகீசிய மொழியும் ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் சேர்க்கப்பட்டுகின்ற போக்கு ஏற்பட்டு அவ்வழக்கம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் தூத்துக்குடிப் பகுதிகளில் நிலவியது. இதனை தூத்துக்குடி ஒர்நல்லோஸ் பள்ளி வளாகத்தில் உள்ள கி.பி. 1808 ஆம் ஆண்டு இறந்து போன டான் கேப்ரியல் டி கிரஸ்வாஸ் கோம்ஸ்க்காக அமைக்கப்பட்ட கல்லறைக் கல்வெட்டில் காணலாம்.
ஐரோப்பியர்களில் மதம் மற்றும் படைசார்ந்த பெருமக்களுக்கான கல்லறைக் கல்வெட்டுகளைப் பற்றிக் காணும் போது வேளையில் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் மறக்கமுடியாதவராவார். இவர் கி.பி. 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சென்னையில் (மாவட்ட) ஆட்சித் தலைவராக பணியாற்றியவர். தமிழில் மிக்க புலமை பெற்றவர். திருக்குறளை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர். இராமநாதபுரத்தில் உயிர்நீத்தார். இவருக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டு இராமநாதபுரத்திலும், கல்லறைக் கல்வெட்டு திண்டுக்கல்லிலும் உள்ளன.