கொற்கை

கொற்கை என்ற இச்சிறிய கிராமம் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பண்டையக் காலத்தில் தாமிரபரணி ஆறு இப்பகுதி வழியாகச் சென்றுள்ளது என்பது சான்றுகள் மூலம் அறியப்படுகிறது.

 

சங்ககாலத்தில் கொற்கை ஒரு முக்கிய முத்துக் குளிக்கும் துறைமுகப்பட்டினமாக திகழ்ந்துள்ளதை இலக்கியங்கள் வழி அறிகிறோம்.

 

அதன் காரணமாக வெளிநாட்டுப் புவியியல் ஆய்வாளர்கள் இப்பகுதிக்கு வந்து சென்றுள்ளனர் என்பதைக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் ஒன்பது அடுக்குடன் கூடிய செங்கற்கட்டடப் பகுதி ஆறு வரிசையில் இருப்பது வெளிப்படுத்தப்பட்டது.

 

இச்செங்கற்கட்டடப்பகுதிக்கு கீழே மூன்று பெரிய சுடுமண் வளையங்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கி.பி 300-200 நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், அடுப்புக் கரித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இவ்வடுப்புக் கரித் துண்டுகள் காலத்தை அறியும் பொருட்டு, அனுப்பப்பட்டன. இவற்றின் காலம் கி.மு. 785 என்று கணக்கிடப்பட்டுள்ளது.