மாங்குடி
மாங்குடி கிராமம், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ளது. மதுரைக் காஞ்சியின் ஆசிரியர், மாங்குடி மருதனார் இவ்வூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கள ஆய்வின் போது, ரோமானியப் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல் துறை இப்பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் அகழாய்வினை மேற்கொண்டது.
நாயக்கர்புஞ்சை என்ற பகுதியில் பத்துக் குழிகள் போடப்பட்டு, நுண்கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. “குருமங்கள அதன் இ யானைய் போ” என்ற தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இப்பானை ஓடு சங்ககாலத்தைச் சார்ந்தது என அறியப்படுகிறது. (கி.மு 200)